Thursday, March 19, 2009

கல்வியின் மகத்துவம்.

வாய்த்ததொரு பழப்புளியை கைதனிலே எடுத்து
தேய்த்திடவே கழன்று விடும் பாத்திரத்தின் களிம்பு.
வாய்த்த நல்ல ஆசிரியர்கள் கல்வி எனும் புளியால்
தேய்த்து விட அறியாமை நீங்கி விடும் அறிவை விட்டு.
வாய்த்த இந்தப் பிறவியில் நம் அறியாமை தன்னை
மாய்த்து விடும் கல்வியதன் மகத்துவம் அளப்பரியது.

கல்வி என்றால் நூல்கள் தனை கவனமுடன் படித்து
நல்லபடி மனதிலே பதித்தல் என்று எண்ணும்
புல்லறிவாளர்களின் புகட்டல்களை மறந்து
கல்வியெனும் கருவியினால் நல்லறிவை நாம் காண்போம்.
இல்லாததொன்று இடித்தாலும் வாராது நம்முடன் இருந்துவரும்
நல்லதாம் அறிவதனைத் துலக்குவது கல்வியதே.

எல்லாமே செய்ய வைக்கும் பாதாளம் வரை பாயும்.
செல்வம் என்று சொல்லும் பணம் நிரந்தரம் இல்லைப் பார்
வெல்லுவோம் என்ற மன அகந்தையை வளர்த்து விடும்.
வல்லமை எனும் வீரம் ஒரு வயதிற்குத்தான் ஒளி வீசும்
சொல்லுகின்ற சொல் எதிலும் நல்ல பொருள் கூறும்
கல்வியாளன் மகத்துவம் காலத்தால் அழியாதது.

பெட்டிகளில் போட்டு வைத்துப் பல பூட்டுப் போட்டுப் பூட்டினாலும்
ஈட்டி வைத்த பொருட் செல்வம் கள்வர் பயம் சேர்ந்து நிற்கும்
போட்டி பொறாமை தரும் வீரமெனும் இறுமாப்பும்
வீட்டில் நிம்மதியை அழித்துவிடும் மனப்பயத்தால்
ஏட்டினிலே ஆணி கொண்டு எழுதி வைத்த கல்வியது
காட்டி நிற்கும் அழியாத நற்கருத்தே அதன் மகத்துவமாம்.

தேசம் விட்டுத் தேசம் சென்று தேகமதை வருத்தி
பாச உறவுகளை தூர விட்டுத் தேடி வைத்த
காசு பணங்கள் எல்லாம் எடுக்கெடுக்கக் குறைந்த போகும்
நேசமுடன் நம் உடலைத் தீனி போட்டுப் பெற்ற வீரம்
மோசமான நோய் வந்தால் போகுமிடம் தெரியாது
பேசப் பேசப் பொலிவு பெறும்அறிவூட்டும் கல்வியது
காசு வீரம் போலன்றி கடைசிவரை அழியாது
எடுக்க எடுக்கக் குறையாது, ஏற்றம் கூடி வரும்
இருக்கும் இடங்களெல்லாம் சிறப்பதனைப் பெற்றுத்தரும்
மிடுக்குடனே சபைதனிலே நிமிர்ந்து நிற்க வைத்துவிடும் கல்வி.

No comments:

Post a Comment